தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கடந்த நேற்றுமுன்தினம் பால விக்னேஷ் (42 ) என்பவர் மட்டும் தனியாக பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு டூ வீலரில் வந்த நான்கு பேர், பாலவிக்னேஷிடம் பெட்ரோல் போட கூறியுள்ளனர். இதில் ஒருவர், பாலவிக்னேஷிடம் பாத்ரூம் எங்கே இருக்கு என கேட்டுள்ளார். உடனே பாலவிக்னேஷ் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பாத்ரூமை காட்டியுள்ளார்.
அப்போது, திடீரென அந்த நபர் பால விக்னேஷை கையில் வைத்து இருந்த பையை பிடிங்கிக்கொண்டு பாத்ரூமுக்குள் தள்ளி கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக, பாலவிக்னேஷ் 50 ஆயிரம் ரூபாயை பணத்தை திருடிச் சென்றதாக, அதிராம்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், பெட்ரோல் பங்கில் சி.சி.டி.வி., கேமரா பழுதடைந்து இருந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், அப்பகுதி முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் டூவீலரில் வந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த மசூத்,22, மற்றும் மூன்று சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை நேற்று காலை அதிராம்பட்டினம் போலீசார் பிடித்து விசாரித்ததில், பங்க் ஊழியர் பாலவிக்னேஷிடம் இருந்து, ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுத்துச் சென்றோம் என தெரிவித்தனர்.
ஆனால், பாலவிக்னேஷ் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போனதாக புகார் அளித்தால், சந்தேமடைந்த போலீசார், அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது, நடந்த திருட்டை தனக்கு சாதமாக பயன்படுத்தி, 50 ஆயிரம் ரூபாயை தான் எடுத்துக்கொண்டதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக, பெட்ரோல் பங்கில் திருடிய மசூத்,22, மூன்று சிறுவர்கள் மற்றும் பாலவிக்னேஷ் உட்பட 5 பேரையும் அதிராம்பட்டினம் போலீசார் நேற்று கைது செய்தனர்.