Skip to content
Home » பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது.

பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தகவல் அறிந்த டி எஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
இதற்கு இடையில் தடைய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் ராகுல் வயது (22),குணசேகரன் என்பவரது மகன் சச்சின் வயது (24) ராஜசேகர் என்பவரது மகன் ராக்கி என்கிற ராகேஷ் வயது (22), கீழ கல்கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் லோகேஷ் வயது (23) ஆகிய நான்கு பேர் மீதும் திருவெறும்பூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கீழகள் கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த லோகேஷை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை செய்த போது அவர்கள் அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை கொண்டு ரவிச்சந்திரன் வீட்டில் அடித்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது வீட்டின் அருகில் உள்ள பாலக்கட்டையில் தினமும் மாலை நேரங்களில் இவர்கள் 4 பேரும் அமர் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதனை ரவிச்சந்திரன் கண்டித்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *