கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர்.
அப்போது நிரப்பப்பட்ட பெட்ரோலின் அளவு தங்களது வாகனத்தின் டேங்க் அளவைவிட கூடுதலாக இருப்பதாக தெரிவித்து, பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் பங்கில் இதை கவனித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்களில் ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களான மண்மங்கலத்தை சேர்ந்த பாரதி, முகமது முஜாபுதீன் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பாரதியை கீழே தள்ளி செருப்பு காலால் தலையில் பலமாக மிதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பாரதி மற்றும் முகமது ஆகிய இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பாரதி மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.