கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அளித்துள்ள மனுவில், தற்போது மத்திய அரசானது கடைகளில் வாடகைக்கு இருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் வாடைகையுடன் சேர்த்து 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை கடந்த மாதம் அறிவித்துள்ளது. இதனால் சில்லறை வணிகர்கள் மிகவும் அதிர்ச்சிய அடைந்துள்ளனர் என்றும் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் சில்லறை வணிகம் செய்ய மாநகராட்சி உரிமம், குப்பைக்கான உரிமம், தொழில்வரி உரிமம் போன்றவற்றை எடுத்துதான் வியாபாரம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகள் எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் அரசால் வசூல் செய்யப்பட்டது என்றும் ஆனால் தற்பொழுது அனைத்துமே சில்லறை வியாபாரிகளால் செலுத்த முடியாத அளவிற்கு வரி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சூழ்நிலையில் கடைகளில் வாடகைக்கு இருக்கும் வாடகைதாரர் 18 விழுக்காடுகள் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும் என்று சொன்னால் இது அவர்களின் வருமானத்திற்கு தகுதியான காரியம் இல்லை என்றும் எனவே மாவட்ட ஆட்சியர் வணிகர்களின் சூழ்நிலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வாடகை கடைகளுக்கான 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.