Skip to content
Home » லஞ்சம் தலைவிரித்தாடும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம்

லஞ்சம் தலைவிரித்தாடும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம்

  • by Authour

தமிழகம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவுசார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான  சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அலுவலக ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு  உள்ளது. தமிழ்நாட்டில் லஞ்சம் இல்லாமல்  பைல் நகராது என்று சொன்னால் அது சார்பதிவாளர் அலுவலகங்கள் தான் என  சாதாரண மக்களும் கூறும் அளவுக்கு இங்கு லஞ்சம் எழுதப்பட்டாத  சட்டமாகி விட்டது.

ஆனாலும் வேலூர் மாவட்டம் இதில் முதலிடத்தில் முன்னோடியாக இருக்கிறது என பொதுமக்கள்  வேதனையுடன் கூறுகிறார்கள்.  இத்தனைக்கும் இங்கு அவ்வப்போது  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தத்தான் செய்கிறார்கள்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பங்களா மேடு பகுதியில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகம் மட்டும்   சமீப காலங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வில்லை.  இதனால் இங்கு   லஞ்சம்  வாங்குவது இல்லை என  கூறிவிட முடியாது.

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த  பெண் அதிகாரி  பணிபுரிந்து வருகிறார். இவர் நான்கு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப் 2-வில் தேர்ச்சி பெற்று தன் சொந்த மாவட்டத்திலே திருப்பத்தூர் சார்பாதிவாளர் அலுவலகத்தில் பயிற்சி சார் பதிவாளராக பணிக்குச் சேர்ந்த நாள்  முதலே எவ்வாறெல்லாம் முறைகேடு செய்யலாம் என்பதை  தெளிவாக தெரிந்து கொண்டவர் என அங்கு  பணியில் உள்ள  ஊழியர்கள் கூறுகிறார்கள்.

இவர்  மீது  தொடர் புகார்கள் வந்ததால் அவர் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேர்ணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டதாக  கூறுகின்றனர். மேலும் இவர் பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 2022 ஆண்டு பணியிடம் மாற்றிக் கொண்டு வந்த நாளிலிருந்து  பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரி போல் தன்னைத்தானே காட்டிக் கொண்டு 50 வருடத்திற்கு முன்பு உள்ள மூல மூலப் பத்திரங்களை கொண்டுவரச் சொல்லி அவர்களை அலைக்கழிக்கிறார்.

இந்த பெண் அதிகாரியை  கண்டித்து பல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பத்திரப்பதிவு செய்யும் ஆவணங்களுக்கு லஞ்சம் வாங்குவதற்காக நூதன முறையில் அந்த ஆவணங்களில் பென்சிலில் குறியீடு செய்து வைத்து விடுவாராம். அதன் பின்னர் பேரணாம்பட்டு நிழல் சார் பதிவாளராக செயல்படும்  அலுவலக உதவியாளர் சத்தியமூர்த்தி எந்தெந்த ஆவணங்களுக்கு எவ்வளவு லஞ்சம்  என வாங்கிக் கொண்டு அந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என அனைத்து வேலைகளையும் அவர் கச்சிதமாக செய்து முடி க்கிறார்.
சத்தியமூர்த்தியின் தலைமையில் அதே அலுவலகத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ளூரை  சேர்ந்த அம்ஜித் என்பவர் (டேட்டா என்ட்ரி) தினக் கூலிக்கு பணி செய்வது போல் உள்ள வெளிநபரான புரோக்கர் அம்ஜித்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட எந்தப் பதிவு வேலை செய்ய வேண்டும் என்றாலும் அது அம்ஜீத் மூலம் தான் கொண்டு வர வேண்டும் என்று நிழல் சார் பதிவாளர்  சத்தியமூர்த்தி உத்தரவு போடுகிறார். பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணியானது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களான உதவியாளர்கள் செய்ய வேண்டிய வேலையை வெளிநபரான அம்ஜித் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேஜையில் அமர்ந்து தான் ஒரு அரசு ஊழியர் போல் சார்பதிவாளரின் லாகின் ஐடி முதல் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் லாகின் மூலம் பல்வேறு பணிகளை செய்தும், இது தவிர ஈசி சரி பார்ப்பதும், பதிவு ஆவணங்கள் சரி பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருவது தொடர்கதையாக உள்ளதாம். இவர்கள்  வாங்கும் லஞ்சம் பினாமி பெயரில் பதிவு செய்யப்பட்டு  உள்ளதாம். அப்படி சேர்த்த சொத்துக்கள் ஒவ்வொருவருக்கும்   கோடி பெறுமாம்.

எனவே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டிற்கு விடை தெரிய வரும்!  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின்  நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.