பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிதார். அதன் பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தின் அருகே அவர் அணிந்திருந்த செருப்பு, காலியாக கிடந்த அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு கைக்குட்டை ஆகியவை கிடந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபர் பேண்ட், முழக்கை சட்டை அணிந்து இருந்தார். கையில் கயிறு கட்டி உள்ளார்.
காலியாக கிடந்த தண்ணீர் பாடடிலில் தான் கெரசின் கொண்டு வந்து உடலில் ஊற்றி தீவைத்து உள்ளனர். இந்த வாலிபரை எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என தெரிகிறது. பின்னர் அந்த வாலிபர் சடலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சடலமாக கிடந்த இளைஞர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக எரித்துக் கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. காதல் விவகாரமா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிபர் யாரும் காணாமல் போய் இருக்கிறார்களா என அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.