பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என். அருண்நேருவை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் , தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது உதயநிதி பேசியதாவது:
தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை 5 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால் மாதம் 2 முறை பெரம்பலூரில் தங்கி மக்கள் பிரநிதிகளுடன் சேர்ந்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து தேவையான அனைத்து வசதிகளை நிறைவேற்ற 100 சதவீதம் செயல்படுவார் என வாக்குறுதி அளிக்கிறேன். 10 ஆண்டுகளில் தமிழகத்தின் எல்லா மாநில உரிமையையும் பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடகு வைத்துள்ளது. இதனால் மாநில உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியை நீங்கள் ஆதரிக்கவேண்டும். முதல்வர் ஸ்டாலின் நிர்ணயிப்பவர் தான் பிரதமர்.
இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெற வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 480 கோடி மதிப்பீட்டில் கோத்தாரி காலணி பூங்கா திறந்து வைக்கப்பட்டு, 30 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 370 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, பாடாலூர், எறையூர் பகுதிக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 280 கோடி மதிப்பீட்டில் பாடாலூர், திருவிளக்குறிச்சி பகுதியில் ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பீல் தடுப்பனை அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம்தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி கட்டுகிறோம். ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெறும் 29 பைசா தான் தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி பணத்தை வாரி, வாரி மத்திய அரசு வழங்குகிறது. மிக்ஜாம் புயலால் மிகவும் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரூ. 37 ஆயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டது. நிவாரண நிதி கேட்டோம், ஆனால் மத்திய அரசு இதுவரைக்கு ஒரு பைசா கூட தரவில்லை, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
மத்திய பாஜ அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்வளர்ச்சிக்கும், தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை, ஆனால் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. நீட் தேர்வு இந்தியா முழுவதும் 2010ல் வந்தது. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
கல்வி உரிமையை மீட்கவேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை, வருமானவரித் துறைகளை வைத்து அ.தி.மு.க. அமைச்சர்களை முன்பு மிரட்டி பணிய வைத்ததுபோல தி.மு.க. அமைச்சர்களையும் மிரட்டப் பார்க்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம். மருத்துவ காப்பீடு திட்டம், சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 7.5 லட்சம் கோடி பணம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசின் சி.ஏ.ஜி. அமைப்பு தணிக்கை செய்து அறிக்கை கொடுத்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தீர்கள். அதேபோல இந்த தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இந்த பிரசாரத்தில், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் சி. ராஜேந்திரன்,மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர்,ஆர்.அருண், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.