பெரம்பலூர் நகரின் முக்கிய சாலையான எளம்பலூர் சாலையில் அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுற்று இன்று ஸ்ரீபாலமுருகன் மூலவர், ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரகங்கள் அடங்கிய பரிவார தெய்வங்களின் ஆலய ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி புதன்கிழமை மங்கல இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், அஸ்தர ஹோமம், நவகிரஹ ஹோமம் உள்ளிட்டவைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபூஜை, காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், அனுக்ஞை பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்ற நிலையில், நேற்று 6ம் தேதி
வியாழக்கிழமை, விநாயகர் பூஜை, புண்ணியாக வஜனம், விவேஷசந்தி பூஜை, யாகசாலை பிரவேஷம், யாகசாலை ஹோமம், திரவியாஹூ தி, பூர்ணாஹூ தி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதனையடுத்து இன்று காலை யாகசால பூஜை ஹோமம், நாடிசந்தானம், திரவியாஹூ தி, மஹா பூர்ணாஹூ தி மற்றும் தீபாராதனையுடன் காலை 8:45 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து மகா தீப ஆராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பெரம்பலூர் நகரம் மட்டுமின்றி, எளம்பலூர், செங்குணம், செஞ்சேரி, ஆலம்பாடி சிறுவாச்சூர் . கவுள்பாளையம் மற்றும் நெடுவாசல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று இரவு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.