பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துவிட்டதாக பெரம்பலூர் மாவட்டக் குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, கொரட்டூரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சந்தோஷ்குமார் (37), இவரது மனைவி சிவசங்கரி (35),பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் ஆகியோர், பொதுமக்களிடம் ரூ. 1 லட்சம் செலுத்தினால், மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வட்டித்தொகை வழங்கப்படும் எனக் கூறி, பவித்ரா மட்டுமின்று சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2.30 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையிலான குழு, சென்னைக்குச் சென்று சிவசங்கரி யை கைது செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கரியை திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ் வழக்கில் தலைமறைவாகியுள்ள சந்தோஷ்குமார், சரத்குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.