பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் கழிவுநீர் வசதி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம் சாட்டியும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,இன்று அதே பகுதியில் உள்ள
பெரிய வெண்மணி கிராமத்தில் தொழிற்பயிற்சி கல்லூரிக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜையும், வேப்பூர் கிராமத்தில் மகளிர் விடுதி, நியாய விலை கடைகள் திறப்பு என 10 கோடியே 87 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும்,புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வேப்பூர் பகுதிக்கு வந்திருந்தனர்.
இதனை அறிந்த ஓலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் வேப்பூர் கிராமத்தின் ஆறாவது வார்டு உறுப்பினர் பழனிமுத்து என்பவர் தலைமையில், அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என வேதனை தெரிவித்து சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.