பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.01.2024) தொடங்கி வைத்தார்.
நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மஞ்சள் பை பயன்பாட்டை பொதுமக்களிடையே அதிகப்படுத்தும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட ”மீண்டும் மஞ்சப்பை இயக்கம்” பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது மற்றும் நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்பாட்டை நடைமுறைபடுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் சார்பாக தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ஒரு 10 ரூபாய் அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களை செலுத்தினால் ஒரு மஞ்சள் துணிப்பையை இயந்திரம் வழங்கும் வகையில் இந்த தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சள் பை பெறும் நிகழ்வை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மஞ்சப்பைகளை வழங்கினார். நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் இனி துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர்.மு.செந்தில் குமார் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.