பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (24.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த காசநோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்கும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் மற்றும் சளி, பசியின்மை, மாலை நேர காய்ச்சல், சளியில் இரத்தம் வருதல், மார்பு வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காச நோய் ஆறு மாத சிகிச்சையில் முற்றிலும் குணமடைய செய்ய முடியும் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கோஷம் எழுப்பியவாறும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டும் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (காசநோய்) மரு.ரா.நெடுஞ்செழியன், இணை இயக்குநர் (பொது சுகாதாரம் மரு.க.அசோகன், இருக்கை மருத்துவர் ச.சரவணன், நகராட்சி துணை தலைவர் ஹரி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.