அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது…. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் இல்லம் தேடிக்கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மாணவ-மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி கனவை நினைவாக்கும் புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. அந்த வகையில், மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அரசின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது.
உங்களுக்கு இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் அறிவுரைகளை, நுணுக்கங்களை கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துக்கின்றேன். நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன். முதுகலை உயிரியல் படித்துள்ளேன். உங்களுக்கு உயிரியில் பாடப்பிரிவிற்கான வகுப்புகளை விரைவில் நானே வந்து எடுக்கிறேன். படிப்பில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில்
வைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நீங்கள் அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வினை எளிதில் எதிர்கொண்டு அனைவரும் மருத்துவர்களாக வர வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன். கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.