பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியினை பார்வையிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் , தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக மாற்ற
அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர வண்டிகளையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.