2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே முடிவு செய்து விட்டார். அதன்படி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சர் கே. என். நேருவின் மகன், தொழிலதிபர் கே. என். அருண்நேரு போட்டியிடுவார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி அருண்நேரு, சென்னையில் முதல்வரை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்று விட்டு வந்துள்ளார். இன்று அவர் பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகம் சென்றார். அங்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரை சந்தித்து பேசினார். அருண் நேருவுக்கு குன்னம் ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் வர இருக்கும் தேர்தல் குறித்தும், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுவது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட தேர்தல் பணிகளை தொடங்கியது போன்றது தான் என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் பேசிக்கொண்டனர்.