பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழர் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத்திட்டமான மாபெரும் தமிழ்க்கனவு என்ற நிகழ்வு இரண்டாம் கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் இன்று (10.08.2023) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் பேஸ்புக், இன்ஸ்டா, சினிமா தலைமுறையும், புத்தகம், பேச்சு, எழுத்து தலைமுறையும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே தெரிவித்ததாவது: மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழர்களின் மரபுசார்ந்த தொன்மையினையும், பண்பாட்டையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துக்கூறிட வேண்டும். என்ற உன்னத நோக்கத்தில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய தலைமுறையினர் காலை முதல் இரவு வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றீர்கள். முகநுால் அதிகம் பயன்படுத்துகின்றீர்கள். அந்த முகநூலை கண்டுபிடித்தவர் யார் என்பது எத்தனை பேருக்கு
தெரியும். முகநூலை கண்டுபிடித்தவர் மார்க் ஜிப்டெம்பர். அவர் கல்லூரி சென்று உயர்கல்வி படித்தவர் அல்ல. பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்காமல், அதில் இருந்து என்னென்ன நல்ல தகவல்களை சேகரிக்க முடியும் என்பதை தேடுங்கள். கெவின் மற்றும் மைக் என்ற நண்பர்கள் இன்ஸ்டாகிராமை கண்டுபிடித்தார்கள்.
அவர்களின் அடுத்த நிலை மாற்றத்திற்கான சமூக சிந்தனையே தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வலைதளங்களாக உலா வருகின்றறது. நீங்களும் அடுத்த நிலைக்காக என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள். சிந்தித்துக்கொண்டே இருந்தால்தான் இந்த சமூகத்திற்கு நாம் நன்மை செய்ய முடியும்.
இன்று சமூக வலைதளங்கள் பல மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோல, அன்று பல ஆளுமைகளின் எழுத்தும், பேச்சும், புத்தகங்களும் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கின. அதனால்தான் நமது தமிழ்நாடு கல்வியில், எழுத்தறிவில், பேச்சில், புத்தக வாசிப்பில், கலையில் முன்னேறியிருக்கின்றது.
சிறந்த கேள்வி கேட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிந்தனைச் செல்வி, சிந்தனைச்செல்வன் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கில் உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும், அரசின் திட்டங்கிளில் எவ்வாறு பயனடையலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மாணவ, மாணவிகளுக்கு திட்ட விளக்கவுரையாற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் திரு.நீல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி மஞ்சுளா, கல்லுாரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.