பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.11.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசிஸ்டபுரம் கிராமத்தைச் சார்ந்த பழனிவேல் என்பவர் விபத்தின் மூலம் உயிரிழந்ததை தொடர்டந்து அவரது குடும்பத்தினரின் சார்பாக திருமதி சந்திரா என்பவருக்கு ரூ.2,05,000 மதிப்பிலான உதவித்தொகையும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ஜோசப் என்பவர் இயற்கை மரணமடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் சார்பாக திருமதி கிறிஸ்துமேரி என்பவருக்கு ரூ.55,000 மதிப்பிலான உதவித்தொகையும்,சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சார்பில், பசு மாடு மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி இறந்ததை தொடர்ந்து மாட்டின் உரியைாளரான வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை என்பவருக்கு ரூ.30,000 மதிப்பலான நிவாரணத்தொகையும் என மொத்தம் 03 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2,90,000 மதிப்பிலான உதவித்தொகையினை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 463 மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அருளாளன், மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் பெ.விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.