பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அதிகமான பாரம் ஏற்றி செல்வதால் சாலை பழுதடைவதுடன், அவ்வப்பொழுது விபத்துகள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் வரப்பெறுகின்றது. அவ்வாறு அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி சீட்டு இல்லாமல் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மீதும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்க எடுக்கப்படும். வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் இதனை கண்காணித்து விதி மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் ஜல்லி,எம்.சாண்ட், கிராவல் உட்பட அனைத்து கனிமங்களும் சாலையில், சிந்தாமல் சிதறாமல் இருக்க முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்
.
அனைத்து குவாரி குத்தகை உரிமதாரர்களும் தங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் மட்டுமே குவாரி பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், லாரி ஓட்டுநர் அதிவேகமாக வாகனங்கள் இயக்குவதை தடுக்கவும் மற்றும் செல்போன் பேசிக் கொண்டுவாகனத்தை இயக்குவதை தவிர்க்கும் பொருட்டும் சம்மந்தப்பட்ட குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் தங்களது வானக ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அதன் விபரத்தினை எழுத்துபூர்வமாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து குவாரி குத்தகை உரிமைதாரர்களும் தங்களுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்ட குவாரி பகுதியைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையம் அமைத்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் வளவன், தங்கவேல், உதவி புவியியலாளர் இளங்கோவன், தனி வருவாய் ஆய்வாளர் ப.குமரி ஆனந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.