அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.10.2023) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.3.50 இலட்சம் மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களை துவங்க கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி எதுவும் வரையறை செய்யப்படவில்லை. மேலும் விண்ணப்பதாரர் புதிய தொழில் முனைவோராக இருக்கும் பட்சத்தில் வயது வரம்பு 18 முதல் 55 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழில் செய்து கொண்டிருப்போருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. இத்திட்டத்தில் 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 89255 33977, 89255 33978 என்ற தொலைபேசியிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், பெரம்பலுார் 621 212 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம். இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜெ. பிரபு ஜெயகுமார் மோசஸ் அவர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.