மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (08.12.2023) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று (08.12.2023) நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.