பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடிவந்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரும் மனுக்களை அலுவலர்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் பேசி, அவர்களுக்கான தீர்வுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க ஆகும் காலத்தையும் அதற்கான உரிய காரணத்தையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கிட வேண்டும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். வாரந்தோறும் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தவார மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். உரிய காரணங்கள் ஏதுமின்றி பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தாமதாகும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் உரிய விளக்கம் கோரப்படும். எனவே, அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களின் மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 273 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி பொம்மி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.