பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (3.7.2023) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த பெரம்பலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கண்ணன் என்பவருக்கும், வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த அ.மேட்டூர் மற்றும் அரும்பாவூர் பிற்படுத்தப்டோர் காலனி பகுதிகளைச் சேர்ந்த 9 நபர்களுக்கும், அரும்பாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 5 நபர்களுக்கும் என மொத்தம் 15 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், பணியின்போது உயிரிழந்த சத்துணவு பணியாளர்கள் இருவரின் வாரிசுதாரர்களான எம்.மேரி மற்றும் கா.ஜீவிதா ஆகியோருக்கு முறையே வெங்கலம் மற்றும் கத்தாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைப்பாளருக்கான பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வழங்கினார்.
மேலும், கடந்த வாரம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ள அலுவலர்களை பாராட்டுகின்றேன். பிற அலுவலர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என்று தெரிவித்தகலெக்டர், மாதந்தோறும் முதல் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் வரவேண்டும் எனவும், பிற திங்கள்கிழமைகளில் ஒவ்வொருதுறையின் சார்பிலும் ஒரே நபரே குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரவேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்று இக்கூட்டத்திற்கு வருகை தராத முதல்நிலை அலுவலர்களிடம் உரிய விளக்கம் கோரவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சி.வேலுமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன் மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.