தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.11.2023) பாலக்கரை பகுதியிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பு கையெழுத்து இயக்கத்தினையும் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் துவக்கி வைத்தார். ஜவஹர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியில் சுவாமி விவேகானந்தா நர்சிங் கல்லூரியைச் சார்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி பாலக்கரை வளைவிலிருந்து துவங்கி
சங்குப்பேட்டை வழியாக ரோவர் வளைவில் நிறைவுபெற்றது. இப்பேரணியின் இறுதியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான சட்டங்கள், திட்டங்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், குழந்தை நலக் குழு, காவல் துறையின் கடமை மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றினை பறைசாற்றும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீதி நாடகங்கள் நடைபெற்றது. இந்த பேரணியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தஸ்தஹீர், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.