பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலையில் வசித்து வந்தவர் செல்வராஜ்- பவுனாம்பாள் தம்பதியரின் மகன் சரவணன்(31).
பெரம்பலூர் மகளிர் காவல் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்த இவர், உறவினர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை வீட்டை விட்டு சென்றவர் இன்று காலை வரை வீடு திரும்பாத நிலையில், இவரது மனைவி சங்கீதா கணவனை காணவில்லை என
பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சரவணன் போலீசார் தேடி வந்த நிலையில்,
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதிக்கும்- சாலை பகுதிக்கும் இடையே கிழக்கு பக்கம் தனியார் பிளாட் பகுதியில் சரவணன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மர்மமான முறையில் இறந்து கிடந்த சரவணனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.