பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து:விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
திண்டுகல்மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வேனில் திருவண்ணாமலை சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜோசப் பள்ளி அருகே வந்த போது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது டிராக்டர் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. வேன் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து முன்பகுதி சேதமடைந்தது.இதில் டிராக்டர் ஓட்டுநர் உட்பட வேனில் வந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அங்கு காயமடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை சம்பவ இடத்திற்கு எதிரே தெற்கு புற திசை நோக்கி நிறுத்தி விட்டு அதில் இருந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் டிராக்டர் ஓட்டுநரை பார்க்க சென்றார். பின்பு ஆம்புலன்ஸ் பின்புறம் வேனில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் ஏற்றி கொண்டிருந்த போது சென்னை -திருச்சி ரோட்டில் அதி வேகமாக சென்ற ஆம்னி பேருந்து சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது.
இதில் ஆம்புலன்ஸ் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெரம்பலூர் அரணாரையைச் சேர்ந்த ராஜேந்திரன் உட்பட வேனில் பயணித்த திண்டுகலைச் சேர்ந்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இச்சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொடர் விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி மற்றும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கூடுதல் காவலர்களை வரவழைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இது தொடர்பா விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.