சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.நேற்று இரவு 11.30 மணியளவில் கார் பெரம்பலூர் அருகே வந்த போது முன்னால் சென்ற டூவீலர் மீது இடித்து, சென்டர் மீடியனில் மோதியது.
மோதிய வேகத்தில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறத்தில் சென்று எதிர்திசையில் வந்தஇரண்டு கார் , வேன் ஆகியவற்றின் மீதும் மோதியது.இதில் சென்னையில் இருந்து சென்ற காரும், திண்டுக்கலில் இருந்து வந்த வேனும் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கொடைக்கானல் டூருக்கு சென்ற சென்னை, கொரட்டூர், பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்த கோபிநாத் மகன் பிரவீன் (30) சம்பவ இடத்திலேயே இறந்தார்.
டூவீலரில் சென்ற திருச்சி மாவட்டம், நடு இருங்களூர் கலிங்கியான் பட்டி தெருவை சேர்ந்த சேகர் மகன் டைட்டஸ் ( 20) என்பவரும் இறந்தார்.
மேலும் காரில் வந்த சென்னை கொரட்டூர் பாலாஜி நகர் சீனிவாசன் தெருவை சேர்ந்த கோபிநாத் மகன் பிரகாஷ் (30), சென்னையை சேர்ந்த ஜெப்ரிக் மகன் கெவின்(30) வெங்கடேஷ் (30) ஆகியோரும்,
டூவீலரில் சென்ற பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராபின் ( 22), தொண்டமாந்துறை மேட்டு தெருவை சேர்ந்த சகாதேவன் மகன் சிவா (17) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பெண்கள் மாலை அணிந்து மேல்மருவத்தூருக்கு சென்ற 21 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன், ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றிபோக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.