பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு-விஜயகுமாரி தம்பதியரின் மகன் சம்பத்குமார் (25),
பிஇ., பொறியியல் பட்டதாரியான சம்பத்குமார் வேலை தேடி வந்தார்.
இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கராசு-விஜயகுமாரி தம்பதியினர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பத்குமார் வசித்து வந்த வீட்டிலிருந்து இன்று துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த
தகவலின் பேரில், வி.களத்தூர் போலீசார் பாலையூர் கிராமத்திற்கு நேரில் சென்று வீட்டை திறந்து பார்த்த போது சம்பத்குமார் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அழுகிய நிலையில், இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து சம்பத்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பத்குமார் கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்?அல்லது தற்செயலாக இறந்து போனாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.