புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசாமி திருக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி மாத கடைசி நானான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் தெளித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரோடும் வீதியில் ஆங்காங்கே பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை ,திருமயம், நம்மணசமுத்திரம், ஆலங்குடி ,அறந்தாங்கி ,பொன்னமராவதி, கொன்னையூர், சிவபுரம், தேக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர். அதேபோன்று திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் விலகி நற்காரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாத மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு எற்பாடுகளை திருமயம் ஆய்வாளர் மருது, நமணசமுத்திரம் சார்பு ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்