பெரம்பலூரில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார். பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறவுள்ள மாணவர்களுக்கு வங்கிப் பணியாளர்கள் கல்லூரிக்கேச் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தினர். அந்த முகாமை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார்.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4,566 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதேபோன்று, மாணவர்களுக்கும் இத்திட்டத்தை வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்குதல், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைத்தல், நீண்ட நாட்களாக பரிவர்த்தனை மேற்கொள்ளாமல், முடங்கிய கணக்குகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை கல்லூரி வாரியாக சிறப்பு முகாம்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், அந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டார்.
இதில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, பேங்க் ஆப் பரோடா, சிட்டி யூனியன் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 11 கல்லூரிகளில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 202 மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு இல்லாத வர்களுக்கு புதிய கணக்கு தொடங்குதல், வங்கிக் கணக்கு புதுப்பித்தல், ஆதார் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் மேற் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் (பொ) ஜெயஸ்ரீ, ஆகியோர் பங்கேற்றனர்.