திமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் குமணன், “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் 7500 ரூபாய் ஊதியம் வரும் வகையில் பணியும், கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கு மீண்டும் வேலையும் வழங்கப்படும் என புதிய கொள்கை முடிவெடுக்கப்பட்டு தமிழக சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதனை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கின்றனர்” என தெரிவித்தனர்.
இதையடுத்து மக்கள் நலப்பணியாளர் நல சங்கத் தலைவர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிப்பிரியா, “இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்களை பணி நீக்கம் செய்கின்றனர். மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குகின்றனர். இதனால், மக்கள் நலப்பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்வாதாரம் இத்தனை ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர்கள் உள்ளனர்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, “இது மாநில அரசின் கொள்கை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதில் எப்படி தலையிட முடியும்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, “நாங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிட கூறவில்லை. இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததற்கு ஒரு தகுதியான ஊதியத்தை மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், “மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தற்போது தமிழக அரசு எடுத்துள்ள புதிய கொள்கை முடிவானது வரும் காலத்திலும் தொடருமா? மக்கள் நலப் பணியாளர்களின் பணிக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? அவர்களுக்கு வேலைக்கான பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தேவைப்படுகிறது
எனவே, மக்கள் நலப்பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழக அரசு ஒரு நிரந்தர சட்டத்தை உருவாக்க முடியுமா?” என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், “இந்த விவகாரத்தில் ஓர் அரசு பணியமர்த்துகிறது, பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. சாதாரண குடிமக்களின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாடக்கூடாது” என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை அடுத்தகட்ட விசாரணைக்காக ஏப்ரல் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படும் காலம் வரை, மக்கள் நலப்பணியாளர்கள் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள் என உத்தரவிட்டார்.