பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளப்பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நேரில் ஆய்வு நடத்தினார். இன்று முதல்வர் சென்னை கோட்டையில், வெள்ள சேதம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வெள்ளம் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8500ம், நன்செய் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17000 மும் வழங்கப்படும். இதுபோல கால்நடைகள் சேதத்திற்கும், வீடுகள் சேதத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அந்த மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் அறிக்கை கேட்டு உள்ளார்.
சான்றிதழ்கள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டை போன்றவை பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை புதிதாக வழங்க வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முகாம் நடத்தி வழங்கப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், வீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.