வங்க கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. அந்த புயலுக்கு பெங்கல் எனவும் பெரியடப்பட்டது. 29 அல்லது 30ம் தேதி பெங்கல் ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத்தான் கரையை கடக்கும் என வானிலைய ஆய்வு மையம் அறிவித்தது.
இதற்கிடையே பெங்கலின் நகர்வு மிகவும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிநேரம் பெங்கல் நகராமல் அப்படியே மையம் கொண்டு நின்றிருந்தது. பின்னர் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெல்ல நகர்ந்தது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பெங்கல் தற்காலிக புயலாக 30ம் தேதி காலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என அறிவித்தார்.
பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்கள் அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படும். இந்த நிலையில்தான் பெங்கல் புயல் வேகம் குறைவாக கரையை கடக்கும் என கணித்ததால் அது தற்காலிக புயல் என்று வரையறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை வானிலைய மையம் வெளியிட்ட அறிக்கையின்படி பெங்கல், வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும். நாளை மதியம் அது காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும், புயல் இன்னும் 3 மணி நேரத்தில் உருவாகி விடும். பெங்கல் புயல் கரையை நெருங்கும் நேரத்திலும் புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிககு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தூரத்தில் பெங்கல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகத்தான் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் இயற்கையின் மாறுபாட்டால் இன்றைய கணிப்புபடி அது வலுப்பெற்று புயலாகத்தான் கரையை கடக்கும். அப்போது பலத்த மழை பெய்யும், காற்றும் 90 கி.மீ. வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக தமிழகத்தில் தோன்றிய புயல் சின்னங்கள் சில நாட்களில் திட்டமிட்டபடி கரையை கடந்து விடும். ஆனால் பெங்கல் ஆட்டம் காட்டி வருகிறது.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.