சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:- பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து தான் எங்களின் கருத்தும். பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது; அதன் முடிவு வரட்டும். பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் கூறுவதை பற்றி நீங்கள் (பத்திரிகையாளர்கள்) அவரிடம்தான் கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கருத்து சொன்னாலும் அதை நாகரிகமாக தெரிவிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி நடக்கிறது.
ஒரு மிகப்பெரிய கட்சியின், தற்போதைய ஆளும் கட்சியின் மூத்த தலைவருக்கு நினைவு சின்னம் எழுப்பப்படும்போது எதனால் எதிர்க்கிறோம் என்பதை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும். அதை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும். பல்வேறு நினைவு சின்னங்கள் தேசிய தலைவர்களுக்கும், மாநில தலைவர்களுக்கும் அமைக்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பயன் என்ன? என்பதை கலந்து பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும்.
கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். எங்கள் அரசியல் பாணி 1972-ல் இருந்து நாங்கள் வேறு அவர்கள் வேறு என்றாகிவிட்டது. என்னுடைய அரசியல் பயணம் நாகரிகமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.