பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எனும் நன்மை செய்யும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதால், பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி என அழைக்கப்படுகிறது. இதை விவசாயிகள் இதனை அனைத்து பயிர்களுக்கு பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
புளோரசன்ஸ் ஒரு செல் உடைய நேராகவும், சற்று வளைந்தும், இரும்பு அயனிகளின் பற்றாக்குறையின்போது பச்சை, நீலம், மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு போன்ற புளோரசன்ஸ் வகை நிறமிகளை உற்பத்தி செய்யக்கூடியதும் மற்றும் இரும்பு அயனிகளை குறைக்கும் சிடரோபோரை உற்பத்தி செய்யும் தன்மையும் கொண்டது.
சூடோமோனாஸ் நோய்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது 2,4-டி அசிட்டைல் புளோரோகுளுசினால், பிரைசின், பையோலுட்ரின் மற்றும் பைரால் நைட்ரின் போன்ற நோய் எதிர்ப்பு ஆன்டிபையோடிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரயாக கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த வகை பாக்டீரியம் சிடரோபோர் என்ற இரும்பு அயனியை உட்கிரகிக்கும் வல்லமை உடையது. இதன் மூலம் மற்ற நோய் உண்டாக்கும் பூசணங்களுக்கு தேவையான இரும்பு சத்தை குறைத்து அதன் வளர்ச்சியை தடுக்கிறது. சூடோமோனாஸ் மறைமுக நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுதல் முறையின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
இந்த வகை பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறைகள்…. நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்கிற விகிதத்தில் கலந்து தேவையான தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடித்து நாற்றங்காலில் தூவ வேண்டும். நாற்றின் வேர்களை நனைத்தல்: சூடோமோனாஸ் 2.5 கிலோவை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீருடன் கலந்து பின்னர் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல்திறன் கூடுகிறது.
நடவு வயலில் இடுதல்: நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இடவேண்டும்.
தெளிப்பு முறை: சூடோமோனாஸ் கலவையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வீதம் கலந்து நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.