தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் ஒரத்தநாடு அருகே தோப்பு விடுதி பெரியார் சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டை மீட்டு தரக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பு விடுதி கிராமத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் பெரியார் சமத்துவபுரத்தில் இலவசமாக 100 வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் 80 வீடுகளில் ஒதுக்கப்பட்ட பயனாளிகள் வசித்து வருகின்றனர். மீதமுள்ள 20 வீடுகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தும் அந்த வீடுகளில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.