Skip to content
Home » பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி…..

பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி…..

தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் பவதாரிணி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” பிரபல பின்னணிப் பாடகியும், இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.

கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. ‘பாரதி’ திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாடகி பவதாரிணி மறைவுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *