ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு கீழ் பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து தண்ணீர் திறக்கப்படுமா என்கிற சந்தேகம் விவசாயிகளிடம் இருந்து வந்தது. ஆனால் சீரமைப்பு பணிகளை விரைவில் முடித்து, வழக்கம் போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பல போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் இன்று தண்ணீர் திறப்புக்கான அரசாணை என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரை கடிதத்தினை ஏற்று அரசு கூடுதல் தலைமை செயலாளர், அரசாணையை வெளியிட்டு இருக்கிறார். இதன்படி இந்த ஆண்டுக்கான முதல் பாக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பிரதான கால்வாய் இரட்டைப் படை மதகுகள் மற்றும் தென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் வழியாக ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. 23,846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் 1 லட்சத்து 500 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.