Skip to content

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும்.எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். சாதி, மதம் குற்றவாளிகளுக்கு கிடையாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். யாராக இருந்தாலும், உறவினர் என்றும் ரத்த பந்தம் என கூறி வந்தால் தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள். டிஜிபி, எஸ்பி, கலெக்டர்களுக்கு கூறுகிறேன் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

உள்துறை அமைச்சராக உள்ள அனிதாவும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக உள்ளார். நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பவன் கல்யாணின் இந்த பேச்சு ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.  பவன் கல்யாணின் இந்த பேச்சு குறித்து, முதலவர் சந்திரபாபு நாயுடுவிடம்  அமைச்சர் அனிதா உள்பட பலர் புகார் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!