Skip to content
Home » பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

  • by Authour

தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது‌. அந்த தனியார் பேருந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு இதயப்பகுதியான மணிக்கூண்டு நோக்கி வந்துகொண்டிருந்தபோது அந்த பஸ் டிரைவர் ராஜா பஸ்சின் பிரேக்கை பிடித்தார். ஆனால் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. பிரேக் செயலிழந்துவிட்டது.

இதனால் பேருந்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் செய்வதரியாமல் பயந்துபோய் அலறியதுடன், பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை எல்லோரும் ஓரமாகச் செல்லுங்கள், எங்களை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே பேருந்து ஓட்டுனர் ராஜா எந்த இடத்தில் பிரேக் பிடிக்கவில்லையோ அந்த இடத்திலிருந்தே மணிக்கூண்டு வரை ஆரனை அடித்துக் கொண்டு மிகவும் மெதுவாகவும், அதே சமயத்தில் சாதுரியமாகவும் பேருந்தை ஒட்டிக் கொண்டு வந்தார். அப்போது முன்னாள் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி சற்று தூரம் ஆட்டோவை இழுத்துக் கொண்டே சென்ற பேருந்து மணிக்கூண்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை இடித்துக் கொண்டே மணிக்கூண்டு அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி அப்படியே பேருந்து நின்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மின்கம்பம் பாதியாக வளைந்தது. இதனால் அந்த மின்கம்பம் வழியாக மின்சாரம் செல்லும் பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் ராகேஷ்கிருஷ்ணன் ஆகியோர் மின்சாரவாரிய பணியாளர்களைக் கொண்டு துரிதமாக செயல்பட்டு அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்கினர். இருப்பினும் அந்த மின்கம்பம் முற்றிலும் வளைந்ததால் அந்த இடத்தில் புதிய மின்கம்பம் நடுவதற்கான பணிகள் நாளை (இன்று) முதல் தொடங்கும் என்று தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள் வாகனஓட்டிகள் நலன்கருதி தற்போது அந்த மின்கம்பம் அருகே தடுப்பு வேலிகளை வைத்து அதன்மேல் சிகப்பு துணியையும் போர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ராஜாவின் சாதுரியத்தால் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை‌என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மணிக்கூண்டு பகுதி என்பதால் அந்த தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதி நின்றதை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து பார்த்து சென்றனர். அதில் பலர் போட்டோவும் எடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை செய்தனர்.

இச்சம்பவம் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து ஆட்டோ மீது மோதி ஆட்டோவை தள்ளிக் கொண்டு வரும் காட்சியும், மணிக்கூண்டு பகுதியில் பேருந்து தடுப்பு வேலிகளை இடித்துக் கொண்டே அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி நிற்கும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.