மின் கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒவ்வொரு மாதமும் மின் பயன்பாட்டுக்கு கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு வழங்கி வந்த 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் மின் பயன்படுத்தும் அளவையும், அதற்கான கட்டணத்தையும் மின்னட்டையில் பதிந்து தர வேண்டும்.
ஒரு நாளைக்கு பலமுறை, பல மணி நேரம் மின்தடை செய்வதைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்க அத்திவெட்டி ஊராட்சியில் மின்பாதைக்கு இடையூறாக உள்ளதை அகற்ற வேண்டும். மின்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சாரம் முறையாக கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அத்திவெட்டி கிராம பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சார்பில், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மூத்த தலைவர் ஆர்.காசிநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மதுக்கூர் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.