Skip to content
Home » பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

ஒரு சில கோவிலில் மட்டும் மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக, நீதிபதியாக எமதர்மரை வணங்கி வருகின்றனர். பட்டுக்கோட்டை – அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா கோயில் உள்ளது.

இக்கோயில் தல வரலாறு என்ன சொல்லுது தெரியுமா! ஒருமுறை பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் அவதரித்த பார்வதிதேவியை சிறு குழந்தையாக எமதர்மனிடம் வழங்கினார். சிவபெருமான். அந்த குழந்தையை பூமிக்கு அழைத்துச் சென்று, பெரியவளாக வளர்ந்ததும் சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் சிவனின் கட்டளை. தனக்கு தலைமையான சிவனின் உத்தரவின் படி பூமிக்கு வந்து சேர்ந்தார் எமதர்மன். வருடங்கள் கடகடவென கடக்க பிரகதாம்பாள், பருவ

வயதை எட்டியதும், அவளை சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முடிவு செய்தனர்.

ஆனால் சிவபெருமானே ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மன்மதனை அழைத்து வந்து தியானத்தை கலைக்கும்படி செய்ய கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை அழிக்க, ரதிதேவி கலங்கி நின்று வேண்ட, “இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இருப்பினும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்காக நடத்தப்படும் திருவிழாவின் போது, உன்னுடைய கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்” என்று சிவபெருமான் கூறியருளினார்.

அதன்படி மன்மதனின் உயிரைப் பறிப்பதற்காக எமதர்மராஜன் வந்து இறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம் என்று தல புராணக் கதை சொல்கிறது. இங்குதான் எமதர்ம ராஜாவுக்கு என்று கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் உள்ளது.

6 அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை. பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கணக்குப்படி, தன்னுடைய நீதியை வழங்கும் இத்தல எமதர்மனை பக்தர்கள் நீதிபதியாகவே கருதி வழிபடுகின்றனர் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம், வளைகாப்பு போன்ற எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் ‘படி கட்டுதல்’ என்ற வழிபாடு பிரசித்தம். நியாயமாக சம்பாதித்து காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க, அதுபற்றி ஒரு பேப்பரில் எழுதி, எமதர்மனை பூஜித்து இங்குள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். விரைவிலேயே அதற்கான பலன் கிடைக்கிறது என்கின்றனர். நீதிபதியாக இருந்து எமதர்ம ராஜா தங்களின் பொருட்களை கிடைக்க செய்கிறார் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல் மாசி மாதத்திலும் மன்மதனுக்கு திருவிழா எடுக்கிறார்கள். எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!