Skip to content
Home » பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர். அந்த வீட்டின் மூத்த மகளான செல்லம்மாள் 2 வயதாக இருக்கும்போது, அந்தமான் சென்றவர்கள் அங்கு கூலி வேலை செய்து வந்துள்ளனர். செல்லம்மாள் வளர்ந்து பெரியவர் ஆன பிறகு தனது தாய், தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். இதனால் பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை, பள்ளியில் படிக்க சென்று வந்தவர்களிடம் இரவு நேரத்தில் தமிழ் எழுத படிக்க கற்று தெரிந்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த வெலங்காட்டு வலசுவை சேர்ந்த காமாட்சி என்பவரும் குடும்பத்துடன் அந்தமான் பிழைப்புக்காக சென்று விவசாயம் செய்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் இருந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக காமாட்சி இயற்கை எய்தி விட்டார். கணவர் இல்லை என்றாலும் தனது 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் காய்கறிகள் பயிரிட்டு வந்த நிலையில், அந்தமானில் உள்ள மத்திய, மாநில விவசாயத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் படி தென்னை, பாக்கு மரங்களை நட்டு வளர்த்து வந்துள்ளார். பெரிய அளவில் தென்னை விளைச்சல் இல்லாத நிலையில், மூடாக்கு முறையை பயன்படுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தென்னையிலிருந்து கழிவு செய்யப்படும், தென்னை மட்டை உள்ளிட்ட பொருட்களை தென்னை மரத்தை சுற்றி போட்டு மூடி வைத்ததால், காய்க்காத தென்னை மரங்கள் கூட காய்க்க தொடங்கியுள்ளது. இதனைப்பார்த்த அதிகாரிகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஊடுபயிராக பல வகையான பழ மரங்களை நட்டு அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ளார். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இயற்கை விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியும் வழங்கி வருகிறார்.

இதற்கான பல விருதுகளை பெற்றுள்ளார். மதுரையை சார்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அந்தமான் சென்ற போது செல்லம்மாள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அவரின் திறமையை பார்த்த அவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதை வழங்கினார். அப்போது, உள்துறை அமைச்சர் அமீத்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கேரளா அரசு அவருக்கு தென்னை விவசாயத்திற்காக தேசிய விருது வழங்கி பாராட்டியது.

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலகலாவிய மாநாட்டில் இந்திய நாட்டின் விவசாயி சார்பில் செல்லம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், தனது சொந்த ஊரான கரூரில் உறவினர் வீட்டுக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தனது வாழ்க்கை வரலாற்றை விளக்கமாக கூறிய அவர், இந்தியாவில் உள்ள விவசாயிகள் எந்த காலத்திலும் விவசாயத்தை கைவிடக் கூடாது என கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!