தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 30-வது நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஸ் அவர்களது குடும்பத்தினர் நினைவிடத்தில் சூடம் ஏற்றி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் நினைவிடத்தில் தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. விஜயகாந்த் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோசமாக விருதை பெற்றிருப்போம். கேப்டன் மேல் அன்புகொண்ட அனைவருக்கும் இந்த பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம். காலம் கடந்து காலன் எடுத்துச் சென்றப் பிறகு அளிக்கப்பட்ட இந்த விருது கௌரவமான விருது.
இளையராஜாவின் அன்பு மகள் பவதாரணி மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இளையராஜா குடும்பமும், எங்கள் குடும்பமும் நண்பர்கள் போல் பழகினோம். இளையராஜா அவர்களின் மனைவி ஜீவா அவர்கள் எனக்கு சகோதரி மாதிரி பழகினார். அவர் இல்லாததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பவதாரிணியை சிறுவயது முதல் பார்த்து வருகிறேன். எனது மடியில் அமர்ந்து பவதாரிணி பேசி விளையாண்டதுதான் நினைவுக்கு வருகிறது.விஜயகாந்திற்கு பவதாரிணி ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். பவதாரிணியின் குரலை இனிமேல் கேட்கமாட்டோம் என்று நினைப்பதே வருத்தமாகத்தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.