திருச்சி பொன்மலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் நேற்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு வழியாக பழைய பொன்மலை சி- டை டைப் காலனியில் இருந்து பொன்மலை ரயில்வே பணிமனை செல்லும் வழியில் தொடர்வண்டி பாதை அமைய இருப்பதால், 9.12.2024 இன்றிலிருந்து இந்தப் பகுதி நிரந்தரமாக மூடப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவித்துள்ளனர். ஏற்கனவே மேலகல் கண்டார் கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் எங்களுக்கு உடனடியாக மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு போராட்டமும் நடத்தினர். மேலும் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலமாகவும் ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் மனு அளித்தனர். பின்னர் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் வேறு ஒரு பாதை அமைத்து தரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்/
இந்த நிலையில் திடீரென்று பாதை அமைத்து தராமல் அறிவிப்பு பலகை வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை தருவதாகவும் இதனால் அப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் ரயில்வே நிர்வாகமும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்