சமீபகாலமாக விமானங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், இண்டிகோ விமானத்தில் நடு வானில் பயணிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுபோல பல சம்பவங்களை நடந்துள்ளது.
அந்த வகையில், தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டில்லியில் இருந்து ஐதராபாத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்துவிட்ட நிலையில், விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானப் பணிப்பெண்ணைத் தவறான இடத்தில் ஒரு முதியவர் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த விமானப் பணிப்பெண் சம்பந்தப்பட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதிலுக்கு அந்த நபரும் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது கை வேண்டுமென்றே படவில்லை என்றும், இடம் சின்னதாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் நீடிக்கவே, மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்து அவர்களை சமானாதப்படுத்தி விலக்கிவிட்டனர். இதையடுத்து, அந்த நபர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இருந்தபோதிலும், அவரையும், அவருடன் வந்த மற்றொரு பயணியையும் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டனர். இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், டில்லி – ஐதராபாத் விமானத்தில் விமானக் குழு ஊழியர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலும், தவறாகவும் ஒரு பயணி நடந்துகொண்டார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்துப் பொறுப்பு விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.