தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், கடந்த அக்டோபர் மாதம், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைகடிகாரங்கள், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை திருட்டு போய்விட்டது. வீட்டு வேலைக்காரர் சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாகவும், பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இதையொட்டி வீட்டு வேலைக்காரர் உள்ளிட்ட 5 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேலைக்காரர் சுபாஷ்சந்திர போசும், நடிகை பார்வதி நாயர் மீது பதிலுக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் சமீபத்தில், வேலைக்காரர் சுபாஷ்சந்திரபோஸ் மீது நடிகை பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், தனது புகழை கெடுக்கும் வகையில் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும், தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும், இதற்கு காரணம் சுபாஷ்சந்திரபோஸ் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் அடிப்படையில், சுபாஷ்சந்திரபோஸ் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் 2-வது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் உதவியாளர் சுபாஷ்சந்திரபோஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.