திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணையிலிருந்து அமராவதி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. செட்டிபாளையம் தடுப்பணையிலிருந்து புலியூர் வரை செல்லும் புலியூர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தூர் வாரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி,
மேலப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 200 ஏக்கர் பாசன நிலங்களில் வாய்க்கால் நீர் ஊற்றெடுத்து தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகளில் பயிரிட்டுள்ள பருத்தி, கரும்பு, நெல் பயிர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாசன வாய்க்காலில் தண்ணீர் வடிய வழி இல்லாததால் அவை அழுகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.