கடந்த 13ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபாவில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப் புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சில எம்.பிக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து தாக்கி, பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். உள்ளே இருந்த இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களும் வண்ணப் புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூர் விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோரையும், வெளியே 2 பேர் கோஷமிட்ட ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே (25) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாஜகவை சேர்ந்த எம்பி பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி அவைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 4 பேரும் ஒரே மாதிரியான பதிலை அளித்ததாகவும், தாங்கள் கைது செய்யப்பட்டால் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து முன்னரே அவர்கள் தெளிவாக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 4 பேரும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன், விஷால் ஷர்மா என்பவரின் வீட்டில் தங்கி இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், குருகிராமில் இருந்த அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவருமான கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான லலித் ஜா
சம்பவத்தன்று நான்கு பேருடன் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்குள் செல்ல 2 பாஸ் மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா மட்டும் உள்ளே சென்றதாகவும் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புகைகளை உமிழும் குப்பிகள் மகாராஷ்ட்ராவின் கல்யாண் நகரில் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. லலித் ஜா, நாடாளுமன்ற வாயில் அருகே ஆலம் ஷிண்டே மற்றும் நீலம் ஆகியோர் நடத்திய போராட்டத்தை மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ததுடன், அதனை டிவியில் ஒளிபரப்பு செய்ய ஏதுவாக கொல்கத்தாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் ஆக லலித் ஜா உள்ளார். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்குப் பிறகு, 4 பேரின் மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு லலித் ஜா தப்பி உள்ளார். பேருந்தில் நீம்ரானா வழியாக ராஜஸ்தானின் நாகௌருக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு நண்பர்களுடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர்,சரணடைவதற்காக கர்தவ்யா பாத் டெல்லி காவல் நிலையத்திற்கு வந்தபோது அவருடன் மகேஷ் என்ற மற்றொரு நபரும் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன