திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஒருசில நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அந்த வகையில், சென்னையின் 3 தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி, தூத்துக்குடி உட்பட 16 தொகுதிகள் வரை கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் களம்காண்கின்றனர். அதே சமயம் பெரம்பலூர், தேனி, கோவை, ஈரோடு, ஆரணி தொகுதிகளுக்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையையும் முதல்வர் இன்று வெளியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். இதில், தேர்தல் வியூகம், தொகுதி வாரியாக நடைபெறும் பணிகள், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவும் இன்று முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவிற்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிக்கொள்ள இந்த ஏற்பாடுகளை அதிமுகவும் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 40 பேரையும் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது..