மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் திமுக எம்.பிக்கள் இன்று டில்லியில் போராட்டம் நடத்துவார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணி எம்.பிக்களும் இதில் பங்கேற்றனர்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது X-தளத்தில் …. மிக்ஜாம் புயலும் , பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம். நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை – எங்களின் உரிமையைத் தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று பேசிய பிரதமர் மோடி, இன்று பல எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து உடை அணியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.